தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சிலரும், அரசுப் பள்ளி மாணவர்களை போல, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி தமிழ்நாடு கத்தோலிக்க கல்விச் சங்கமும் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வின் முன்பு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்திருந்த சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், "அரசுப் பள்ளி மாணவர்களும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர ஏதுவாக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழு, 10 சதவீதத்திற்கும் குறையாமல் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே,
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.
அதற்கு ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 26) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார். அப்போது,
- அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த வழக்கில் விரிவாக வாதிட காலஅவகாசம் வேண்டும் என்பது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை ஆறு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - ஆன்லைன் விண்ணப்பம் நடைமுறை தொடங்கியது'