சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரண வழக்கு தொடர்பான சாட்சியங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்நிகழ்வு தொடர்புடைய வீடியோ ஆதாரப் பதிவுகளை வெளியிடுகிறேன். செல்வமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது 30 ஆம் தேதி. ஆனால், 29 ஆம் தேதி காவல்துறையினர் நகைக்கடைக்கு சென்று நகைகளை பறிமுதல் செய்யும் சிசிடிவி காட்சிகள் உள்ளன. சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும்போது காவல்துறை அவர் மீது பொய் வழக்கு போட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
பணியிட மாற்றத்தில் செய்யப்பட்ட ஆய்வாளர், வழக்கு தொடர்பான சிசிடிவி பதிவுகளை காவல்துறை உதவியுடன் கைப்பற்றி அழிக்க முயற்சிப்பதால், சிபிசிஐடி காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்து சாட்சியங்களை காப்பாற்ற வேண்டும். மேலும், இந்த வழக்கு தொடர்புடைய காவல்துறையினர் உள்ளிட்ட அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதில் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? ஆளுங்கட்சியின் துணை கொண்டு காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபடுவது தெரிந்தும் முதலமைச்சர் மவுனம் காப்பது ஏன்? " எனக் கேள்வி எழுப்பினார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று செல்வமுருகன் மரண வழக்கு தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்ட நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்த சிபிசிஐடி ஐஜி சங்கர், அந்த வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி-யிடம் அளிக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து, குற்றம் இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறை சித்ரவதை படுகொலைகளில் கண்காணிப்பு முறை தீவிரமாக வேண்டும் - ஹென்றி டிபேன்