கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக சுமார் 4,800 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனையடுத்து இந்தப் பணிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் லோகநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மலை அடிவாரத்தில் வீடுகள் கட்டினால் மண் சரிவு அபாயம் உள்ளது, வன விலங்குகள் நடமாட்ட அபாயம் உள்ளது, இயற்கை வளங்கள் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் மூன்று வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.