கரூர்: திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை ஆகியவற்றிற்காக கரூருக்கு இன்று (ஏப்.20) வந்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில் 'தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு எதிர்ப்பு பரப்புரை பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 31 மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குலக்கல்வியை கொண்டு வரும் முயற்சி: நீட் தேர்வை எதிர்த்து எனது பரப்புரைப் பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற ஏப்.25ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எனது சுற்றுப் பயணத்தை முடித்து வைக்கிறார். புதிய கல்விக் கொள்கை அல்ல. அது பழைய கல்விக் கொள்கையான குலக்கல்வி தான். இந்திக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள்.
அமித் ஷாவின் பேச்சு: இட ஒதுக்கீடு, சமூக நீதி, பெண் கல்வி இவைகள் எதுவும் இல்லை. ஆங்கிலம் தவிர்க்கமுடியாத மொழி என்பதால், தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சிக்காலத்தில் இருமொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டது. மூன்றாவதாக, இந்தி மொழியை மறைமுகமாகக் கொண்டு வர முயல்கிறார்கள். இணைப்பு மொழி இந்திதான் என்று வெளிப்படையாக அமித் ஷா பேசுகிறார்.
தமிழ்நாட்டை அவமதிக்கும் ஆளுநர்: தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், சட்டபேரவை உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் எதிர்ப்பு தீர்மானத்தை இராண்டவது முறையாகத் தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இதுவரை 11 மசோதாக்களை ஆளுநர் தனது இருக்கைக்கு அடியில் வைத்து அமர்ந்துகொண்டு, காலம் கடத்தி வருகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கிறார். மக்களையும் சட்டப்பேரவையினையும் அவமதிக்கிறார்.
அதிமுக ஆட்சியில் தேர்தல் ஆணையாளர் மீது தாக்குதல்: குறிப்பாக, அதிமுக இவ்வாறு பேசுவது சரியல்ல. சென்னாரெட்டி ஆளுநராக இருந்தபோது, அதிமுகவினர் திண்டிவனத்தில் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்த பொழுது, அவர் தங்கியிருந்த விடுதியைத் தாக்கியது, அதிமுகவினர் தான்.
திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறுவது ஆட்சியைப் பிடிக்க முடியாத விரக்தியில் பேசுவதாகவே எனக்குத் தோன்றுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'அம்பேத்கருடன் மோடியை ஒப்பிடுவதை ஏற்க முடியாது' - முத்தரசன் பேட்டி