உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. இந்த வழக்கில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்தது.
மேலும், கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை உறுதிசெய்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தொடர்பாகப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,
“உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளிகள் விடுதலை என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கென தனிச்சட்டம் இல்லாமையும், அரசுத்தரப்பு வாதம் வலுவாக இல்லை என்பதுவுமே இதுபோன்ற தீர்ப்பு வருவதற்கு காரணங்களாகும்.
இதுபோன்ற தீர்ப்பு ஆணவக்கொலைகளையும், கூலிக் கலாசாரத்தையும் ஊக்குவிக்கும். ஆணவக்கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.