இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா ஆபத்து ஓரிரு நாட்களில் குறைந்துவிடும் என முதலமைச்சர் கூறியிருப்பது வியப்பளிக்கிறது. கரோனா தொற்றின் ஆபத்தைக் குறைத்து மதிப்பிடுகிறாரா முதலமைச்சர்? என்ற கேள்வி எழுகிறது. சமூகப்பரவலை ஒத்திப் போடுவதற்கு மட்டுமே இந்த முழு அடைப்பு உதவும். பரவலாகப் பரிசோதனை செய்து கரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்திச் சிகிச்சை அளிப்பதன் மூலமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
ஆர்டிபிசிஆர்- பரிசோதனைகள் மூலமாக மட்டுமே கரோனா தொற்றைத் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும். தமிழ்நாட்டில் இதுவரை 17 மையங்கள் மட்டுமே ஆர்டிபிசிஆர் சோதனை மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு மையத்தில் நாளொன்றுக்கு பரிசோதனைகள் அதிகபட்சமாக 250 இலிருந்து 300 வரை தான் செய்ய முடியுமென்பதால், நாள் ஒன்றுக்கு 17 மையங்களிலும் சுமார் 5000 சாம்பிள்கள் மட்டுமே சோதிக்க முடியும். இந்நிலையில் ஒரு மையத்தில் எத்தனை மாதிரிகள் (சாம்பிள்கள்) சோதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு கிடப்பில் உள்ளன என்ற விவரத்தைத் அரசு இதுவரை வெளியிடவில்லை. இதனால் அவர்கள் வெளியிடுகிற புள்ளிவிவரங்கள் மக்கள் நம்பக்கூடியவையாக இல்லை.
தற்போது மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும், துப்புரவு தொழிலாளர்களுக்கும் இந்தத் தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. அவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலையில், 'சிறப்பாக செயல்படுகிறோம்' என்று வார்த்தைகளை வைத்து மக்களை குழப்பும் வேலையில் அரசு ஈடுபட்டிருப்பது வேதனை அளிக்கிறது.
எனவே, மருத்துவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து, தமிழக மக்களை கரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - வைகோ