சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சித் துணை தலைவர் வி. பி. துரைசாமி, மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் அடங்கிய பாஜக பிரதிநிதிகள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேற்று (ஜூலை 23) சந்தித்தனர். இது தொடர்பான புகைப்படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்நாடு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளாத ஆளுநர், பாஜக பிரமுகர்களுடன் மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டது ஏன் என தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
காங்கிரஸூக்கு 'நோ'
கடந்த ஜூலை 8ஆம் தேதி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பாக அக்கட்சி மக்களவை உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் ஆகியோர் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார்.
பின்னர், இதனை புகைப்படம் எடுக்க வேண்டும் என கோரியதாகவும், ஆனால், தனக்கு புகைப்படம் எடுக்கும் பழக்கம் இல்லை எனக்கூறி அவர் அதனை மறுத்ததாகவும் சுதா ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வகுப்புவாத சிந்தனைக்கு இடமில்லை
அதேநேரம், நேற்றைய தினம் பாஜகவினரை சந்தித்தபோது மட்டும் ஆளுநர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பது, அவரது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக சுதா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் அவர், "ஆளுநர் என்பது ஒரு அரசியலமைப்பு நிறுவனம். இதில் வகுப்புவாத சிந்தனைகளுக்கு இடம் இல்லை. ஆளுநர் சங்பரிவார அமைப்புகளுக்கு மட்டும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.
அவர் பாஜகவில் ஏதோ ஒரு பெரிய பதவி எதிர்பார்க்கிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளை உதாசீனப்படுத்திய இந்த செயலுக்கு ஆளுநர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி அரசு கேள்வி
முன்னதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு இதே குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "துணைவேந்தர் பதவி ஆதி திராவிடர்களுக்கும் வழங்கக் கோரி கடந்த ஜூலை 8ஆம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்தார்.
அப்போது புகைப்படம் எடுக்க கோரியபோது யாருக்குமே அனுமதி இல்லையென சொன்னார். இப்போது பாஜக கும்பலுக்கு மட்டும் அனுமதியா?" என கேள்வி எழுப்பியுள்ளர்.
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!