இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ”தமிழ்த் திரை உலகில் யதார்த்த இயக்குநர் என வர்ணிக்கப்படும் இயக்குநர் மகேந்திரன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கல்லூரி காலத்திலேயே கையெழுத்துப் பத்திரிகை நடத்தியவர்.1978-ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர். தொடர்ந்து உதிரிப்பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர். ரஜினிகாந்திற்கும், இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு மிகவும் பிடித்த இயக்குநர் என பெயர் பெற்றவர் மகேந்திரன்.
தமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர். திரை உலகில் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்கியவர். அண்மையில் வெளிவந்த தெறி, பேட்ட, நிமிர், பூமராங் படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். வாழ்நாள் முழுவதும் எளிமையாகவே வாழ்ந்தவர். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அழைப்பின் பேரில் தமிழ் ஈழத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பெருமை இயக்குநர் மகேந்திரன் அவர்களுக்கு உண்டு.
சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.