தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது வைகோ பேசுகையில், "இலங்கை கடற்படையால் நான்கு தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடலை இலங்கை அரசு உடற்கூராய்வு செய்து அனுப்பியது. தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு 4 மீனவர்களின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இறந்த மீனவர்களின் உடலை மறு கூராய்வு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவர். தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இங்கு ஒரு அரசு இருக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. குஜராத்திக்கு நடந்திருந்தால் மோடி இப்படி வேடிக்கை பார்த்திருப்பாரா? இந்திய அரசு தமிழ்நாட்டிற்கு விரோதமான அரசாக இருக்கிறது.
தமிழ்நாடு மீனவர்களின் கொலையில் மத்திய அரசுக்கும் பங்கு உண்டு. கோத்தபயா ராஜபக்சேவின் கைகூலியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அங்கு நடந்த படுகொலைக்கு மோடி அரசு கூட்டு குற்றவாளிதான்.
பெரியார் பற்றி பேச எனக்கு தகுதி இருக்கிறது. பெரியாரின் துணிச்சல் மன தைரியம் எனக்கு இருக்கிறது. நான் லட்சியங்களுக்காக அரசியல் நடத்துபவன், பெரியார் அண்ணா வழியில் நாங்கள் பாடுபடுகிறோம் என்று சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறது. உணர்ச்சிப் பெறுவோம், வீறுகொண்டு எழுவோம் ஈழத் தமிழர்களைக் காப்போம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் என்ன யூதாஸா? - வைகோ ஆவேசம்!