மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் காலியாக உள்ள மத்திய அரசின் குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்திவருகிறது. இந்தத் தேர்வுகள் முதல் நிலை, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான குடிமைப்பணிகளுக்கான யு.பி.எஸ்.சி. தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. மத்திய அரசில் காலியாக உள்ள 896 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் தகுதியின் அடிப்படையில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் இன்று நாடு முழுவதிலும் 72 மையங்களில் முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற்றுவருகிறது. முதல் நிலைத் தேர்வில் முதல் தாள் காலை 9.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரையும், இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் தாளுக்கான தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.