சென்னை: மகாத்மா காந்தியின் 75-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகம் இராணுவ அணிவகுப்பு மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (29.01.2022) "தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி" ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் முதலமைச்சர் மேடையில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் திரு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் தீண்டாமை உறுதிமொழியை வாசித்த முதலமைச்சர், "இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.
தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்" என கூறினார்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.
இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும், உளமார உறுதியளிக்கிறேன்.” என கூறினார். இதனையடுத்து சென்னை தலைமைச் செயலக அரசு ஊழியர்களும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, பிடி ஆர் பழனிவேல், தியாகராஜன், நாசர், தலைமைச் செயலாளர் இறையன்பு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் சரிவை சந்திக்கும் கரோனா- குறைந்து வரும் தொற்று எண்ணிக்கை