சென்னை: சென்னையில் உள்ள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் மீன்வளத்துறை அலுவலர்களுடன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று (ஆக. 21) ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் பேசிய அவர், “கடல்சார் பொருள்களின் ஏற்றுமதிகளை பாதிக்கும் பிரச்னைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
2014-15ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டுவரை சராசரியாக 10.2% வருடாந்திர வளர்ச்சி விகிதத்துடன் இந்தியாவில் மீன்வளத் துறை வியக்கத்தக்க வளர்ச்சியைக் எட்டியுள்ளது.
2019-20ஆம் ஆண்டில் இந்தியாவில் மீன் உற்பத்தி வரலாறு காணாத அளவில், 141.56 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்தது. சர்வதேச அளவில் இந்திய மீன் உற்பத்தி தற்போது சுமார் எட்டு விழுக்காடாக உள்ள நிலையில், மீன் வளர்ப்பில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஏற்றுமதி சிறப்பாக இருக்கும்
கரோனா தொற்று மற்ற பல துறைகளைப் போலவே, கடல் உணவு துறையையும் கடுமையாக பாதித்துள்ளது. இருப்பினும், நமது கடல் பொருள்கள் ஏற்றுமதி மீண்டு வருகிறது. அதனால், இந்தாண்டு ஏற்றுமதி இன்னும் சிறப்பாக இருக்கும்" என நம்பிக்கை அளித்தார்.
மீனவர்கள் மற்றும் மீன்வளத் தொழில்களின் நலனுக்காக அரசு எடுத்துள்ள பல்வேறு முயற்சிகளை பட்டியலிட்ட எல். முருகன், பிரதமர் மோடி ரூ.20,050 கோடி முதலீட்டில் பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனாவை (PMMSY) தொடங்கியுள்ளார் என்று கூறினார்.
புதிய மசோதா
இந்த நிகழ்வில், இந்திய கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் தங்கள் குறைகள் சிலவற்றை வெளிப்படுத்தினர். இவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
"பிரதமர், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டுள்ளார். இந்திய கடல் மீன்வள மசோதா 2021-ஐ அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அனைத்து பிரச்சினைகளையும் நாங்கள் கருத்தில் கொள்வோம், தேவையான தீர்வுகளை அரசு அளிக்கும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங் காலமானார்