மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த மூன்று நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல் போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளை தன்னாட்சி அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டம், மக்களாட்சி இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை மெய்ப்பிக்கிறது. தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருமளவு பாதிக்கும், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்-2020 உள்ளிட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், மின்சாரத் திருத்த மசோதா-2020 க்கு எதிராகவும் துவக்கம் முதலே குரல் கொடுத்து வருகிறார்கள் நம் விவசாயிகள்.
வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்று சொல்லப்படுகிற மூன்று சட்டங்களும், வேளாண்மையைச் சீர்திருத்த அல்ல, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வேளாண் சந்தையில் ஆதிக்கம் செலுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளன என்றும், இவை விவசாயிகளை மட்டுமல்லாமல் வெகுஜன மக்களையும் கடுமையாக பாதிக்கும் என்றும் இந்தத் துறையை அணுக்கமாகக் கவனித்து வரும் வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதனால்தான், இன்று பல நூறு கிலோ மீட்டர் பயணித்து, தலைநகரில் தங்கள் கோரிக்கைகளுக்காக குரலெழுப்பி வருகிறார்கள் இந்திய விவசாயிகள்.
வேளாண்மை, ஊரக உள்ளாட்சிகளுடன் நேரடியாகத் தொடர்புடையது. எளிய மக்களுக்கான அதிகாரங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்துடன், 73ஆவது மற்றும் 74ஆவது அரசியல் சாசனத் திருத்தச் சட்டங்கள் மூலம், மூன்றாவது அரசாங்கங்களாக இயங்கக்கூடிய ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. குறிப்பாக, கிராம ஊராட்சிகளுக்கு 11ஆவது அட்டவணை மூலம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள 29 முக்கிய பொறுப்புகளில், வேளாண்மை முதன்மையானது. ஓர் ஊராட்சி, தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மையை முறைப்படுத்தவும் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளது.
கிராமங்களில், வேளாண்மை இல்லாமல் வாழ்வாதாரம் இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் பொருளாதார மேம்பாடு இல்லை. சாமான்ய மக்களுக்கான சமூக நீதியை, பொருளாதார மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டவைதான் ஊராட்சி அரசாங்கங்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் (GPDP), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS) போன்ற பல ஊரக வளர்ச்சித் திட்டங்கள் வேளாண்மையின் முன்னேற்றத்தோடு நெருங்கிய தொடர்புடையவை.
ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில், 11வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள வேளாண்மை உள்ளிட்ட 29 பொருள்கள் குறித்து, ஊராட்சிகள் முடிவெடுக்க முழுமையான அதிகாரம் வழங்கப்படவில்லை. தற்போது ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த வேளாண் சட்டங்கள், மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கின்றன எனப் பரவலாகக் குற்றச்சாட்டு உள்ளது. அப்படியிருக்க ஊராட்சிகளின் உரிமைகளைப் பற்றிக் கேட்கவே தேவையில்லை.
சட்டப்பேரவையை விட, நாடாளுமன்றத்தை விட, மக்கள் நேரடியாகப் பங்கு பெறும் வாய்ப்புள்ள கிராமசபைகளை அதிகாரப்படுத்தி, வேளாண்மை உள்ளிட்ட கிராமப்புற மக்களைப் பாதிக்கும் அடிப்படை விஷயங்களில் முடிவெடுக்க அதிகாரமளிப்பளிப்பதே உண்மையான மக்களாட்சி. இதில் நாம் போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும், பயணிப்பது அவசியம். அதிகாரப் பரவலே மக்கள் விரும்பும் அரசியல் என்பதை வரலாறு பதிவு செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.
உள்ளாட்சிகள் வலுப்பெற வேண்டும் எனக் குரலெழுப்பி வரும் தன்னாட்சி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாகவும் நம் அனைவரின் அடிப்படை ஆதாரமாகவும் இருக்கின்ற வேளாண்மை குறித்த முடிவுகள் மக்களின் கைகளில் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறது.
எவே, டெல்லியில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கு, தன்னாட்சி தன் தோழமையைத் தெரிவிப்பதோடு, போராடும் விவசாயிகளை ஒன்றிய அரசு, கண்ணியமாக நடத்த வேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்க்க வேண்டும் என்றும் கோருகிறது.
இந்தப் போராட்டத்திலிருந்து படிப்பினையைக் கற்றுக் கொண்டு, மக்களாட்சியை வலுப்படுத்தும் வகையில், இனி வரும் காலங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேளாண் குறித்த சட்டங்களைக் கொண்டு வரும் முன், அவற்றை கிராமசபைகளில் விவாதிக்க வழிவகுக்கும் சட்டச் சூழலை உருவாக்க வேண்டுமெனவும் தன்னாட்சி கோருகிறது”என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : கோவையில் தொடர் மறியல் போராட்டம்: இடதுசாரி கட்சியினர் அறிவிப்பு!