சென்னை: சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகரில் தங்குதடையின்றி பால் விநியோகத்தை கண்காணிக்கும் வகையில் பால்வளத்துறை அமைச்சர் நவ.9 ஆம் தேதி இன்று சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால் பண்ணைகளை ஆய்வு செய்தார்.
தடையில்லா பால் விநியோகம்
அங்குள்ள இயந்திரங்களை மழை நீரினால் பாதிக்காதவாறு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய பால் பண்ணை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்களுக்கு எவ்வித தங்கு தடையின்றி பால் கிடைக்கும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும், சென்னை மாநகரில், பால் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெற கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
1. மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு பால் விநியோகம் செய்வதில் பாதிப்பில்லாமல் இருக்க ஏற்பாடு செய்யவேண்டும். பொது மக்களுக்கு பால் விநியோகத்தினை கருத்தில் கொண்டு ஆவின் பாலகங்கள், டெப்போக்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்க வேண்டும்.
2. மொத்த விற்பனையாளர்கள் மூலம் மாநகரின் பல பகுதிகளில் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
3. தற்பொழுது 178 பால் வண்டிகளில் 7.50 லட்சம் லிட்டர் பால், பால் அட்டைக்கு உண்டான பால் மற்றும்166 வண்டிகளில் 6.10 லட்சம் லிட்டர் பால் மொத்த விற்பனையாளர்கள் மூலம் 2000 சில்லறை விற்பனையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
4. தேவைப்படும்பட்சத்தில் கூடுதல் பால் விநியோக வழித்தடங்கள் அமைக்கப்பட்டு நகரின் பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய பகுதிகளில் தட்டுபாடு இன்றி பால் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும்.
5. நடமாடும் பால் விற்பனை நிலையங்கள் மூலம் நகரின் பிரதான பகுதிகளில் பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. பொது மக்களுக்கு தேவையான பால் இருப்பு வைக்கும் வகையில் அனைத்து ஆவின் பாலகங்களிலும் 1/2 கிலோ மற்றும் 1 கிலோ பால் பவுடர் பாக்கெட்டுகள் இருப்பு வைக்க வேண்டும்.
7. நீண்ட நாட்கள் கெடாத டெட்ரா பேக் பால் பாக்கெட்டுகளை அனைத்து ஆவின் பாலகங்களிலும் போதிய இருப்பு வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
8. தட்டுப்பாடின்றி பால் விநியோகம் நடைபெற சென்னை மாநகரிலுள்ள அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
9. சென்னையில் பால் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக பால் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பால் தட்டுப்பாட்டினை தவிர்க்கும் வகையில் சுமார் 10000 (1 மற்றும் 1/2 கிலோ) கிலோ பால் பவுடர் பாக்கெட்டுகள் ஆவின்விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்க வேண்டும்.
இந்த ஆய்வின் போது, சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், வட கிழக்கு பருவ மழை 15வது மண்டல அலுவலர் கே.வீரராகவ ராவ், ஆவின் மேலாண்மை இயக்குநர் க.சு.கந்தசாமி, மற்றும் ஆவின் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தொடர் மழை - அம்மா உணவகத்தில் இலவச உணவு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு