சென்னை: கரோனா தொற்று பாதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு பலரையும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. நோய் தொற்று பயம், வேலை இழப்பு, வருவாய் இழப்பு, மன உளைச்சல் உள்ளிட்டவற்றில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், கரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் நாட்டின் பிரதான நகரங்களில் அதிகம் தேடப்பட்ட இணைய சேவை என்னவாக இருந்தது என்பது குறித்து சுலேக்கா என்ற இணைய தேடுதல் சேவை நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின்படி, நாடு முழுவதும் வீட்டு வேலை செய்பவர்கள், வேலை வாய்ப்பை பெற்றுத் தரும் நிறுவனங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக உதவும் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவைகளே அதிக அளவில் தேடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல், வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்ததால் இணைய சேவை இணைப்பு குறித்த தேடுதலும் அதிகரித்துள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் இணையதளம் வாயிலாக சேவைகளைத் தேடுவது 95 விழுக்காடு அதிகரித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டிலேயே அதிக அளவில் இணையதள சேவைகள் தேடப்பட்ட நகரங்களில் சென்னை 5ஆவது இடத்தில் உள்ளது. சென்னையை பொருத்தவரை அதிக அளவில் தங்கும் விடுதிகள் (பிஜி) தேடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக வீட்டு வேலை செய்பவர்கள் தேடப்பட்டுள்ளனர். தொடர்ந்து வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் நிறுவனங்கள் குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் சென்னையில் இணையதளம் மூலமாக அத்தியாவசிய தேவைகள் தேடுவது 75 விழுக்காடு அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: நிதி நெருக்கடியிலிருந்து மீளும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள்!