சென்னை: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி முதல் நேரடியாக நடைபெறுகிறது என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை குழு தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2020-2021 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் டிசம்பர் 23ஆம் தேதி சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.
பிவிஎஸ்சி&ஏஎச்( இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல்), பிடெக் உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்பு பிரிவில் விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு டிசம்பர் 23ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு, தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடைபெற உள்ளது. இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு ஆன்லைன் மூலம் 24 ஆம் தேதி காலை 10 மணி முதல் 28ஆம் தேதி மாலை 6 மணி வரை பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தின்பண்டங்களைக் கொண்டு கிறிஸ்துமஸ் குடில் - புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்