பொது மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டியது ஊராட்சியின் கட்டாய கடமையாகும். குடிநீர்ப் பிரச்னை இருந்தால் அதைத் தீர்ப்பதற்கான சில நடவடிக்கைகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத பழைய ஆழ்துளைக் கிணறுகளை பழுது நீக்கி மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புதிய ஆழ்துளைக் கிணறுகளையும் அமைக்க வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கை தற்காலிகத் தீர்வையே தரும்.
எனவே, ஒரு ஊராட்சி தனது மக்களின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என்றால் நிலத்தடி நீரைப் பெருக்க வேண்டும். அதற்கு, ஏரி, குளம் உள்ளிட்டவைகளைக் கட்டாயம் தூர்வார வேண்டும். அதேபோல், நீர் வரத்துப் பாதைகள், கால்வாய்கள் ஆகியவற்றையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். குறிப்பாக, மழை நீரையும் சேமிக்கும் நடவடிக்கையிலும் ஊராட்சி இறங்க வேண்டும்.
ஊராட்சியில் இருக்கும் சிறு குளம், குட்டை போன்ற சிறிய நீர் நிலைகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வரும். ஆனால், ஏரியின் பயன்பாடானது 100 ஏக்கருக்கு அதிகமாக இருந்தால் அது பொதுப்பணித்துறையின் கீழ் வரும் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் ஒரு பெரிய ஏரி ஒரு அரசுத்துறையின் கீழ் மட்டும் வராது. அந்த ஏரியின் மண் வருவாய்த் துறையின் கீழ் வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊராட்சியின் மூலம் எண்ணிக்கை வரம்பு ஏதுமின்றி எத்தனைக் குடிநீர்க் குழாய் இணைப்புகளும் கொடுக்கலாம். குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவைப்படும் அளவிற்கு இணைப்புகளைக் கொடுக்க வேண்டும். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகமே முடிவெடுக்கும்.