ஊராட்சி நிர்வாகத்தில் பல முக்கிய பணிகளை மேற்கொள்ள ஊராட்சி செயலர் கடமைப்பட்டவர் ஆவார்.
உதாரணமாக சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் மோட்டார் இயக்குபவர் உள்ளிட்ட கிராம ஊராட்சியின் அனைத்து அலுவலர்களையும், பணியாளர்களையும் நிர்வகிப்பது, வரிகளை வசூல் செய்வது, மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதில் ஊராட்சித் தலைவருக்கு உதவுவது போன்ற செயல்களை செயலர் செய்ய வேண்டும்.
ஊராட்சி செயலர் ஊராட்சித் தலைவருக்கு கட்டுப்பட்டவர். அதிக காலம் விடுப்பு எடுப்பது போன்ற சில விஷயங்களுக்கு மட்டுமே அவர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கட்டுப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊராட்சி செயலருக்கு மாத ஊதியமாக ரூ 11,000 வழங்கப்படும். இது அவர் பணி செய்த ஆண்டுகளைப் பொறுத்து மாறுபடும். ஊராட்சி செயலர் உட்பட அனைத்துப் பணியாளர்களையும் நியமிக்கும் பொறுப்பு ஊராட்சி மன்றத்தையே சாரும். இதில் ஊராட்சி செயலரின் நியமனத்திற்கு ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவை.
மேலும், ஊராட்சி செயலரின் செயல்பாடுகளில் ஏதேனும் தவறு இருந்தால் அவரை, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 106இன் படி ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்யலாம்.