திமுக இளைஞரணி, மாணவரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் கூட்டம், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, "கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வகுப்பறைச் சூழலில் இருந்து விலகி பொழுதுகளை கழித்து வரும் மாணவர்களை, வீட்டில் இருந்து நேரடியாக தேர்வு அறைக்கு அழைத்து வந்து தேர்வு எழுது என்றால் அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தையே தரும். அதேபோல், தேர்வு அறையில் உள்ள மாணவர்களில் யாராவது ஒருவருக்கு தொற்று இருந்தாலும், அது மற்ற மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் பரவும் சூழல் உள்ளது.
தகுந்த விலகலோடு தேர்வை நடத்துவோம் என்றாலும் தேர்வுக்கு முன்னும், பின்னும் கூடிப்பேசும் மனநிலை கொண்ட மாணவர்களிடையே இது எந்த அளவுக்கு கடைபிடிக்கப்படும் என்பது கேள்விக்குறிதான். அதனால் ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, 10 முதல் 15 நாட்கள் பள்ளி இயங்கிய பிறகு பொதுத் தேர்வை நடத்துவது என்பதே சரியாக இருக்கும்.
இதை வெற்றி தோல்வியாக கருதாமல் நம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்பானது என்பதை மனதில் கொண்டு செயல்படுமாறு அரசைக் கேட்டுக் கொள்கிறோம். எனவே, 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்குமாறு இக்கூட்டம் அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், ”எரித்துக் கொல்லப்பட்ட விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும். கரோனா நெருக்கடியை பயன்படுத்தி பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்” உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: 'தேதியில் மாற்றங்களே இல்லை; 10ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்'