2021 சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை தொடக்கி வைப்பதற்காக, நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கருணாநிதி, முரசொலிமாறன் ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (நவம்பர் 20) மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, "தமிழகத்தை மீட்போம்" என்ற நிகழ்ச்சி மூலம் தேர்தல் பரப்புரையை தொடங்கிய நிலையில், தடையை மீறி பரப்புரை மேற்கொண்டதாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று (நவம்பர் 21) நாகப்பட்டினத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதன் ஒரு பகுதியாக, அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இரண்டு கி.மீ., தூரம் மீனவர்களுடன் படகில் சென்றார். அப்போது, மீன் விற்பனையில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனிடையே, நாகப்பட்டினம், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், "என்னுடைய பரப்புரையை கண்டு அதிமுக அரசு அஞ்சுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. என்து பரப்புரையை தடுக்கும் வகையில் கைது நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது" என்றார்.