மக்களவைத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இலக்கிய களத்திலிருந்து தேர்தல் களத்துக்கு வந்திருக்கும் தமிழச்சி, மக்களவை உறுப்பினராக டெல்லி செல்வாரா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்துள்ளது. தேர்தல் பணிகளையும் அவர் முழுவீச்சில் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், மேடவாக்கத்தில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதை மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். விழாவில் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”நாளை முதல் 25 நாட்களுக்கு தேர்தல் பரப்புரையை தொடங்க இருக்கிறேன். எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழச்சி தங்கபாண்டியன் அழகான மற்றும் அறிவான வேட்பாளர். நான் அழகென்று சொல்வது, அவர் தமிழ் மேல் கொண்டிருக்கும் பற்றை கூறுகிறேன்.
திமுக அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 18 இடைத்தேர்தலிலும் வெற்றிபெறும் என நம்பிக்கை உள்ளது. வாரிசு அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. கட்சிக்கு செய்த உழைப்புக்கு கொடுத்த வாய்ப்பு” என்றார்.