"நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு வேண்டுகோள். அந்த தொகுதியை, திமுகவிற்கு கொடுத்தால், எளிதில் வென்று விடுவோம். மேலும், தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக எப்போதும் இல்லாத அளவிற்கு நிறைய தொகுதிகளில் நிற்கவேண்டும். தலைவருக்கு நிறைய இரக்க குணம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை அள்ளி கொடுத்துவிடுவார். கூட்டணி முக்கியம்தான். இருந்தாலும், தொண்டர்களின் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கிறேன்". உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் பேசிய பேச்சு இது.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் உதயநிதியின் பரப்புரை பயணம் ஈடு இல்லாதது. சுற்றி சுழன்றார். பல பேச்சுக்கள் பேசினார். உடன்பிறப்புகளிடையே புது நம்பிக்கை பிறந்ததுதான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அந்த உடன்பிறப்புகள் யார் என்பதுதான் இங்கு பெரிய கேள்வி. குமரிக்கரையோரம் இருக்கும் உடன்பிறப்போ, ஏதோ வறண்ட பூமியில் தோளில் கட்சி துண்டை போட்டுக்கொண்டு மிதிவண்டியில் வந்து ஆர்ப்பாட்டமோ இல்லை மறியலோ தொண்டை கிழிய கத்தி உதிரம் கொதிக்க போராடும் உடன்பிறப்பு மத்தியிலோ இந்த நம்பிக்கை வந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில்.
அவர்களை பொறுத்தவரை திமுக என்றால் அண்ணா, கருணாநிதி என்று இருந்தவர்கள். ஸ்டாலின் தளபதியிலிருந்து தலைவர் நாற்காலிக்கு நகர்ந்திருக்கிறார் என்றால் அவர் கொடுத்த விலை என்பது ஏராளம். அடிமட்ட உடன்பிறப்பு என்ன என்ன வேலை செய்வாரோ அத்தனையும் செய்து இன்று அறிவாலயத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் உதயநிதி இதுவரை கலந்துகொண்ட ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். பரப்புரை செய்தார்தான், அனல் பறக்க பேசினார்தான் இல்லை என்று கூறவில்லை. ஆனால் அவரது கள நிலவரம் என்ன?
மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வென்று அசுர பலத்துடன் திமுக டெல்லி சென்றிருக்கிறது. 2004 திரும்பியிருக்கிறது என்று உடன்பிறப்புகள் பூரிக்கிறார்கள். மகிழ்ச்சி. ஆனால், இடைத்தேர்தல் நிலவரம் உடன்பிறப்புகள் மத்தியில் அச்சத்தை அல்லவா விதைத்திருக்கிறது. ஒன்பது தொகுதிகளில் பணம் வென்றது என்று திமுக தலைமை கூறினாலும் அதையும் மீறி வென்றிருக்கல்லவா வேண்டும். அதைத்தானே ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்தது. ஆனால் அது தவறிவிட்டதே. இந்த மக்களவைத் தேர்தல் அபார வெற்றியும் மோடி எதிர்ப்பு அலையா, ஸ்டாலின் ஆதரவு அலையா, இல்லை இத்தனைக் கட்சிகள் கூட்டணி வைத்ததனால் வந்ததா? என்ற ஆராய்ச்சிகள் இன்றளவும் நடந்துகொண்டுதானே இருக்கிறது.
நாங்குநேரியை விட்டுவிடுங்கள் உதயநிதி. சரி கூட்டணி உங்களுக்காக விட்டுக்கொடுக்கிறது வென்றுவிடுங்கள். ஆனால், சட்டப்பேரவை தேர்தலில் நிறைய தொகுதிகளில் நிற்க வேண்டும் என்று பேசியிருக்கிறீர்கள். பெரும்பான்மையோடு வெல்ல வேண்டும் என்ற ஆசையும், 2006 ஆம் ஆண்டு திமுக வென்று, ஜெயலலிதாவால் மைனாரிட்டி ஆட்சி என்று விமர்சித்ததன் வலி உங்களைவிட உடன்பிறப்புகளுக்கு அதிகமாகவே இருக்கிறது. அந்த வடு ஆறாததுதான். அதை ஆற்றிக்கொள்ள வரும் சட்டப்பேரவை தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். நல்லதுதான்.
ஆனால், அதை பேச இப்போது என்ன அவசரம் உதயநிதி. குறிப்பாக இளைஞரணி தலைவர் பதவிக்கு உங்களை கொண்டு வர உங்கள் தந்தை காட்டும் வேகத்தைவிட உங்களது உற்ற நண்பன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேகம் காட்டிக்கொண்டிருக்கிறார். நீங்கள் கூறிய இதே கருத்தை கட்சியின் மூன்றாம் கட்ட தலைவர்களோ, நான்காம் கட்ட தலைவர்களோ பேசியிருக்க முடியுமா? பேசினால் என்ன நடந்திருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். திமுக அசுர பலத்துடன் டெல்லி சென்றிருக்கிறது. இந்த அசுர பலத்துக்கு கூட்டணிக் கட்சி தலைவர்களின், தொண்டர்களின் கரங்களும் காரணம் என்பதை மறந்துவிட்டீர்களோ என தெரியவில்லை. மறதி இயல்புதான் ஆனால் இவ்வளவு விரைவான மறதி பெரும் வியாதி. உடனடியாக குணப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் தந்தை ஒவ்வொரு படியாக ஏறி வந்தவர். ஆனால் நீங்கள் நேராக மாடிக்கு பறந்து செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறீர்களோ என்ற எண்ணம் அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது. நிறைய பயணப்படுங்கள், திராவிட சித்தாந்தத்தை கடைக்கோடி உடன்பிறப்பிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் பேச்சில் திராவிட சித்தாந்தமும், வரலாறும் அடித்து ஆடட்டும். கிராமம் கிராமமாக சென்று இளைஞர்களுடன் பழகுங்கள். ஏனெனில், திமுக வளர்ந்ததற்கும், ஸ்டாலின் தலைமைக்கு வந்ததற்கும் முழு முதல் காரணம் கிராமத்து உடன்பிறப்புகள்தான்.
மிக முக்கியமாக நீங்கள் தற்போது இளைஞரணி பதவிக்கு வந்தீர்கள் என்றால் ஏற்கனவே குடும்ப அரசியல் என்று பெயர் வாங்கிய திமுகவுக்கு இது மேற்கொண்டு ஒரு இடியாக இறங்கும் அல்லவா. இந்தியாவில் எந்த கட்சியிலுமே குடும்ப அரசியல் இல்லையா என உங்கள் ஆதரவாளர்கள் வாளை சுழற்றலாம். இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மற்ற கட்சிகளுக்கும் திமுகவுக்கும் கடலளவு வேறுபாடு இருக்கிறதல்லவா. சமூக நீதி, சமத்துவத்தை அடிநாதமாக கொண்ட கட்சிதானே திமுக. இங்கு உழைத்தால்தான் மரியாதை என்ற தகுதி ஒரு காலத்தில் இருந்தது அல்லவா. அதை உணர மறுக்கிறீர்களே.
ஊராட்சி செயலாளராக வருவதற்கே அவ்வளவு உழைப்பு கொட்டிய கட்சியில் இளைஞரணி தலைவர் பதவி உழைக்காமல் எப்படி வரும் உதயநிதி. நீங்கள் இதுவரை இளைஞரணி பதவி குறித்து வாய் திறக்கவில்லை. நான் அடிமட்ட தொண்டனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் என பேசுகிறீர்கள். ஆனால், பேசி என்ன பயன். இங்கு பேச்சைவிடவும் செயலைத்தானே கவனிக்கிறார்கள். ஏனெனில், நான் இனி அதிகம் பேசப்போவதில்லை செயல்பட போகிறேன் என்று திருச்சி உரையை தொடங்கினீர்கள். அந்தவகையில், உங்களது செயல் என்ன. கிராம சபை கூட்டத்திற்கு சென்றீர்கள். மக்களோடு மக்களாக பேசினீர்கள். ஆனால் இவையெல்லாம் தேர்தலுக்கு முன்னர்தானே. வேனில் நின்று கொண்டு, மேடையில் நின்று கொண்டு பேசுவதைவிட கீழே இறங்கி பேசுங்கள்.
உங்கள் தந்தை ஸ்டாலின், பள்ளி வயதிலேயே அரசியல் பிரவேசம் செய்தவர். வாரிசாக இல்லை சாதாரண உடன்பிறப்பாய் அரசியலுக்கு வந்தவர். உங்களது 14 வயதில் நீங்கள் சில்வர் ஸ்பூன் குழந்தையாக இருந்தபோது அதே வயதில் உங்கள் தந்தை வீதி வீதியாக கட்சிக்காக அலைந்துகொண்டிருந்தார். அவர் பொதுக்குழு உறுப்பினரான ஆண்டு 1973. ஆனால், 1972ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.முக.வின் சார்பாக உடன்பிறப்புகளை அழைத்துக்கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை கருணாநிதியிடம் வழங்கினார். அங்கிருந்து ஆரம்பித்து, வட்ட பிரதிநிதியாகி இருந்து, இளைஞரணி தலைவராய் உயர்ந்து இப்போது தலைவராகி இருக்கிறார். ஆனால் நீங்கள் உங்களை சுற்றி ஒரு வட்டம் அமைத்துக்கொண்டு அதற்குள் சுற்றிக்கொண்டிருக்கிறீர்களோ என்ற எண்ணம் எழுவதை எழுதாமல் இருக்க முடியவில்லை உதயநிதி.
ஏனெனில் உங்களது தாத்தா கருணாநிதியின் கால்கள் பயணப்படாத கிராமங்கள் வேண்டுமென்றால் இனி புதிதாக ஒரு கிராமம்தான் உருவாக வேண்டும். ஸ்டாலின் இளைஞரணி தலைவராக வந்தபோது அவருக்கு வயது 31. உங்களுக்கு வயது தற்போது 41. பத்து வருடங்கள்தான் இடைவெளி. நீங்கள் தாராளமாக தற்போது இளைஞரணி தலைவராக வரலாம். ஆனால், இந்த பத்து வருட இடைவெளியில் ஸ்டாலின் உழைத்த உழைப்பில் ஒரு துளி இருக்கிறதா உங்களிடம்.
அதுமட்டுமில்லை, உங்கள் தந்தை இளைஞரணி தலைவராக இருந்தபோது நீங்கள் தற்போது பேசியது போல் அவர் பேசியது இல்லை. பொறுமையாக இருந்தார். கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்தார். ஆனால் நீங்களோ பதவிக்கு வருவதற்கு முன்பே கூட்டணிக் கட்சிகளை சீண்டுகிறீர்கள். வேண்டாம் பொறுமையாக இருங்கள். கருணாநிதியிடமிருந்து ஸ்டாலின் கற்றுக்கொண்டது உழைப்பை மட்டுமல்ல பொறுமையும்தான்.
எனவே, உங்கள் கால்களுக்கு வேகத்தையும், உங்களுக்கு கொஞ்சம் பொறுமையையும் கூட்டுங்கள். உங்கள் ஆதரவாளர்களின் வாய்களுக்கு பூட்டு போடுங்கள். இன்னும் காலம் இருக்கிறது, தூரம் இருக்கிறது. முக்கியமாக உழைப்பு இருக்கிறது. அதனால் ஒன்றும் அவசரம் இல்லை உதயநிதி உழைத்துவிட்டு காத்திருங்கள்...