சென்னை: இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்போகிறோம் எனப் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கூறிவருகிறது. ஆனால், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவல நிலை தற்போதுவரை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது.
தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு
நிலவுக்கு ராக்கெட் அனுப்பும் தேசத்தில் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கு இயந்திரம் இல்லாததால் பலர் உயிரிழந்துவருகின்றனர். கழிவுகளை அகற்றும் பணியின்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கிடையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனிதநேயமற்ற செயல், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மே 30ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு
திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்தே தனது தொகுதியில் பம்பரமாய் சுழன்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்துவருகிறார்.
குப்பைக் கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டுவரும் அவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றியும் வருகிறார். மருத்துவமனைகள், மயானங்கள், அம்மா உணவகங்கள், பள்ளிகள், குடிசை வீடுகள் என ஒரு இடத்தையும் விட்டு வைக்காமல் அவர் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது.
மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம்
இந்நிலையில் நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நடுக்குப்பம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற உதயநிதி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மனிதக் கழிவுகளை இயந்திரத்தை கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயதிதி தொடங்கிவைத்துள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் இயந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை தொடக்கிவைத்தோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.