சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் நிறுத்துமிட (பார்க்கிங்) ஒப்பந்தத்தை ராஜ்குமார் என்பவர் எடுத்திருந்தார். 2017ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி தொடங்கிய ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிந்தது. இதேபோல மந்தைவெளியில் ஜெயபாலன், சைதாப்பேட்டையில் ஜெகதீசன், சிந்தாரிப்பேட்டையில் விஜயகுமார் ஆகியோர் ஒப்பந்தம் எடுத்திருந்தனர்.
கரோனா பரவல் காரணமாக மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பொது போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் பார்க்கிங் ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டதாகவும், அதனால் இடத்தை காலி செய்யும்படி அந்த ஒப்பந்ததாரர்களுக்கு தெற்கு ரயில்வே மண்டல மேலாளர் அக்டோபர் 19ஆம் தேதி தனித்தனியாக உத்தரவிட்டார். மேலும் ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதால் வாகனம் நிறுத்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இன்று (டிசம்பர் 12) விசாரித்தார். அப்போது மனுதாரர் தரப்பில், “ஊரடங்கு காலத்தில் வாகனங்களை நிறுத்த யாரும் வராததால் ஒப்பந்ததாரர்களுக்கு வருவாய் இல்லை” என்று கூறப்பட்டது. இந்த கோரிக்கை மனுவிற்கு, நான்கு வாரத்துக்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மண்டல மேலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.