சென்னை புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர், காவல் ஆணையர் தலைமையகத்தில் துணை ஆணையருக்கு கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசித்து வந்த காவலர் குடியிருப்பில், நுங்கம்பாக்கத்தில் பணிபுரிந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த குடியிருப்பில் வசித்து வந்த ஓட்டுநரான இவருக்கும் கரோனா தொற்று பரவியிருக்க வாய்ப்பு இருப்பதால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்த மாதிரி பரிசோதனை செய்து வந்தார். அதன் முடிவில், துணை ஆணையரின் ஓட்டுநரான இவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளார்.
இதேபோல் திருமங்கலம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு கார் ஓட்டுநராக பணிப்புரிந்து வந்த காவலருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒன்றான மீனாம்பாள்புரத்தில் துப்புரவு பணியாளராக பணிப்புரிந்து வந்த மூன்று பெண்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் 5க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வந்த 35 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த அம்மா உணவகம் சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பெண் பயிற்சிக் காவலருக்கு கரோனா தொற்று உறுதி