சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள தனுஷ் நகைக் கடையில் இரண்டு மாதத்துக்கு முன்பு நகை வாங்குவது போல் வந்த இரண்டு நபர்கள் 5 பவுன் நகையைக் கால் ஷூவில் வைத்துத் திருடிச் சென்றனர். இது குறித்து நகைக்கடை உரிமையாளர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு வந்து அண்ணா நகர் காவல் துறையினர் கண்காணிப்புப் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், நேற்று அண்ணாநகரில் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா தலைமையில் காவலர்கள், வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இரண்டு பேர் காவலர்களைப் பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். உடனே இருவரையும் துரத்திச்சென்ற காவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார் (46), கணேஷ் தோனி (47) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திரா, கர்நாடகா, பெங்களூரு, மும்பை போன்ற இடங்களிலும் கைவரிசையைக் காட்டியது தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அண்ணாநகர் நகைக்கடையில் ஐந்து சவரன் நகையைத் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: திருச்சி அருகே பயங்கரம்: விடுதி காப்பாளர் கத்தியால் குத்தி கொலை