சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு சிங்கம் உயிரிழந்த நிலையில், மேலும் 2 சிங்கங்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 8 சிங்கங்களில், 3 சிங்கங்களுக்கு மட்டும் அறிகுறிகளுடன் கூடிய தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மற்ற சிங்கங்கள் நலமாக இருப்பதாகவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு சிங்கங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவைகளின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சிங்கங்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற விலங்குகளுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த ஜூன் 3, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நீலா(9) எனும் பெண் சிங்கம் உயிரிழந்தது. இப்பெண் சிங்கத்திற்கு முதல் நாளிலிருந்தே சில திரவங்கள் மூக்கிலிருந்து சுரந்து கொண்டிருந்ததாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 11 சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில், 9 சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதியனாது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விலங்கு காப்பாளர்களுக்கும், கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கரோனா தொற்று உறுதியான ஒன்பது சிங்கங்களில் இரண்டு சிங்கங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.