மது கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மக்களின் உணர்வுகளை மதிக்காமல், டாஸ்மாக் கடைகளைத் திறந்ததால் இரண்டு நாட்களில் கொலை, தற்கொலை, குடும்ப வன்முறை, விபத்து என்று விரும்பத்தகாத சம்பவங்கள் மாநிலம் முழுக்க நடந்ததைப் பார்த்த பிறகும் மது கடைகளைத் தொடர்ந்து நடத்த பழனிசாமி அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துகிறேன்.
கரோனா நோய் பாதிப்பும், அதனால் போடப்பட்டிருக்கும் ஊரடங்கும் ஒட்டுமொத்த மக்களையும் நொந்து போகச் செய்திருக்கிறது. வாழ்வாதாரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு எதிர்காலத்தைப் பற்றிய கவலையுடன் ஒவ்வொருவரும் துயரம் மிகுந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். இப்படியொரு நேரத்திலும் மக்களை உறிஞ்சி கஜானாவை நிரப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு மது கடைகளைத் திறந்ததால், நிகழ்ந்த கூத்துகளைப் பார்த்தபோது நெஞ்சம் பதறியது.
கடந்த 10 நாட்களில் தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்த அபாயகரமான நிலையைச் சரிசெய்ய முயலாமல், மக்களைத் தனித்திருக்கவும், விழித்திருக்கவும் அறிவுரை சொன்ன அரசே, மறுபுறம் மது விற்பதற்காக கூட்டத்தைக் கூட்டியது மன்னிக்க முடியாத செயலாகும்.
மக்களின் உயிரோடு விளையாடும் வகையில், கோடிக்கணக்கான தாய்மார்கள் கண்ணீரில் மிதந்தாலும் பரவாயில்லை என்ற கொடூர மனப்பான்மையோடு மது கடைகளைத் திறப்பதில் பழனிசாமி அரசு காட்டும் உறுதி வெட்கக்கேடானது. இனிமேல் 'இது அம்மாவின் அரசு' என்று சொல்வதற்கு இந்த ஆட்சியாளர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது' என தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
விவேகமற்ற கேள்விகளால் பீதியைக் கிளப்ப வேண்டாம்' - காங்கிரசுக்கு கண்டனம்