சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், “ மண்வாசனையோடு பொங்கல் திருநாளை மகிழ்ந்து கொண்டாடுகிற உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும், “மனித இனத்தின் மூத்த குடியாக திகழும் தமிழ்ச் சமூகம் எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியான வாழ்க்கை முறையை வகுத்துக்கொண்டு வாழும் சிறப்பைப் பெற்றது.
அந்த வகையில் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை 4 நாள்கள் விழாவாக அர்த்தமுள்ள வகையில் நம் முன்னோர் அமைத்திருக்கிறார்கள் பழையனவற்றை நீக்குவதற்கும் இயற்கையை வணங்குவதற்கும், மனித இனத்திற்குப் பக்க பலமாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறுவதற்கும், உறவுகளையும் நட்பையும் பேணி மகிழ்வதற்குமான பொங்கல் பண்டிகை, தமிழர்களின் சிறப்பை உலகுக்குச் சொல்லும் திருநாளாக இருக்கிறது.
எனவே, இதற்கு அடிப்படையான விவசாயம் தொழில் அல்ல; நமது வாழ்க்கை முறை என்பதை மனதில் கொண்டு உழவையும், உழவர்களையும் அவர்களுக்கு உற்றத் துணையாக உள்ள உயிர்களையும் கொண்டாடுவோம்
தை முதல் நாளில் பொங்குகிற மகிழ்ச்சி எப்போதும் இல்லங்களில் நிறைந்திருக்கட்டும். தமிழகத்திற்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாளில் வழி பிறக்கட்டும். அதன்மூலம் ஒவ்வொருவரிடமும் அன்பும், ஆரோக்கியமும் தழைத்தோங்கட்டும் என வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.