கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலத்தரப்பு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சூழலில், ஏப்ரல் மாதம் செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்த ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் முடிவடைவதால் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாகச் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
இந்நிலையில், சொத்துவரி செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
![டிடிவி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10:33:55:1594227835_tn-che-15-ttvtweet-7209106_08072020223258_0807f_1594227778_983.jpg)
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் கரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரியை உடனடியாக செலுத்த வேண்டுமென மாநகராட்சி அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
மக்கள் படும் துயரத்தைக் கருத்தில்கொண்டு சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் செப்டம்பர் மாதம் வரையிலாவது நீட்டிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவல்: சென்னையில் இரட்டிப்புக் காலம் 25.4 நாள்கள்