சென்னை : காலஞ்சென்ற பழம்பெரும் உச்ச நட்சத்திரம் ராஜ்குமாரின் இளைய மகன் புனித். 46 வயதான புனித், கன்னட உலகின் முடிசூடா மன்னராக, உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார்.
ரசிகர்களால் பவர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமாருக்கு கடந்தாண்டு (2021) அக்டோபர் 29ஆம் தேதி உடற்பயிற்சி செய்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நினைவு திரும்பாமல், மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகையை சோகத்தில் ஆழ்த்திய அவரது மறைவுக்கு பிரதமர் மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் புனித் ராஜ்குமாருக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜன.6) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, புனித் ராஜ்குமார் மறைவின்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.
கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு, மாநிலத்தின் மிகப்பெரிய கௌரவமான கன்னட ரத்னா விருதை வழங்கி அண்மையில் கௌரவித்தது. புனித் ராஜ்குமார் ஜேம்ஸ், த்வித்வா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். அவர் விட்டுச் சென்ற படங்களுக்கு அவரது மூத்த சகோதரர் ஷிவ் ராஜ்குமார் டப்பிங் பேசி வருகிறார்.
புனித் ராஜ்குமார் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டுவந்தார். கன்னட அரசின் நந்தினி பால் நிறுவனத்துக்கு பணப் பலன் பெறாமல் கடந்த 10 ஆண்டுகளாக விளம்பர தூதராக இருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் ஜன. 5ஆம் தேதி தொடங்கின. 3 நாள்கள் மட்டுமே நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் கரோனா பரவல், கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கில் நடந்துவருகிறது, வருகிற ஜன.7ஆம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 'புனித் ராஜ்குமாருக்கு பாரத ரத்னா'- நடிகர் சரத்குமார் உருக்கமான கோரிக்கை