இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று. அந்த நடைமுறைப்படி பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், இணை அமைச்சர் அர்ஜீன்ராமும் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.
அவர்கள் என்னிடம் பேசியபோது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெறியப்படுத்தினர். ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தமிழ்நாட்டின் முக்கிய நாளிதழில் வெளியான செய்தி, கடைந்தெடுத்த கலப்படமற்ற பொய்.
நாளேட்டிற்கு திரிபுவாதமும் திருகுதாளமும் புரிவது தினசரி பழக்கம் ஆகிவிட்டது. திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் அவரின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல. ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை” என கூறப்பட்டுள்ளது.