சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பலன்களை உடனடியாக வழங்கக்கோரி தமிழ்நாடு முழுவதிலுமுள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் இன்று (ஜன.7) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஜன., 5ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில், துறைச் செயலாளர் சமயமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தையில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று (ஜன.7) போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதிய பணப்பலன்கள் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்லவன் சாலை முன்பு பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய தொழிற்சங்கத்தினர், ஏற்கனவே கரோனா பாதிப்பு காரணமாக 14ஆவது ஊதிய குழு பேச்சுவார்த்தை தொடங்க காலதாமதமாகி உள்ளது. இந்நிலையில், கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இதனால் மேலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. அவர் தலைமையேற்று பேச்சுவார்த்தை நடத்தினால்தான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.
இதையும் படிங்க: மக்கள் நலப் பணியாளர்கள் ரத்தம் விற்கும் போராட்டம்