உலகளவில் நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தப்படுகிறது. ஆனால், திருநங்கைகளுக்கு நடத்தப்படுவதில்லை எனும் குறைபாட்டை போக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தியாவிலேயே முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க திருநங்கைகளை தயார்படுத்தும் மாபெரும் விழா சென்னை லயோலா கல்லூரியில் நடத்தப்பட்டது. 'புதிய பாதையில் திருநங்கைகள்' என்ற தலைப்புடன் துவங்கிய இவ்விழாவில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் திருநங்கைகளின் திறன்களை கண்டறிந்து, அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்த திருநங்கைகளுக்கான பட்டிமன்றம், கோலப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் நடனப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருநங்கைகளின் இந்தக் கோரிக்கை மற்றும் முயற்சிகளை இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய அலுவலர்கள் மற்றும் ஆளுமைகள் வெகுவாகப் பாராட்டியதுடன், அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெறவும் வாழ்த்தினர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்துப் பேசிய திருநங்கைகள், தங்களுக்கு எந்த சாதியும், மதமும் இல்லை என்றும், தங்களின் ஒற்றுமைக்கும், எதிர்காலத்தின் மீதான தன்னம்பிக்கைக்கும் இந்நிகழ்ச்சி ஓர் உந்துதலாக இருப்பதாகக் கூறி சிலாகிக்கின்றனர்.
உலகளவில் யாரும் இதுவரை கேட்டிராத, திருநங்கைகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றக் கோரிக்கை இந்தியாவில் குறிப்பாக சென்னையில் முதன் முதலாக எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அதற்கான முன் முயற்சிகளையும் கையில் எடுத்துள்ள சென்னை திருநங்கைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ‘தாடி, தொப்பி வைத்திருந்தால் தீவிரவாதியா?’ - தூத்துக்குடியில் கொதித்த வேல்முருகன்