சென்னை: திருமணம் செய்துகொள்வதாக மோசடி செய்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
குறிப்பாக மணிகண்டன் மீது கட்டாயக் கருக்கலைப்பு செய்தல், பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவாக இருந்த மணிகண்டன் கைது
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் மணிகண்டன் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு ஆதாரங்களை காவல் துறையினர் தொடர்ந்து தேடி வந்து இருந்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, நீண்ட நாட்களுக்குப்பிறகு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மணிகண்டன் ஜாமீன்கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
நிபந்தனையின்படி இரண்டு வாரங்களுக்கு விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்த அடிப்படையில் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்துள்ளார். முன்னதாக இந்த வழக்கை அடையாறு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை மேற்கொண்டார்.
திரிபுரசுந்தரி இடமாற்றம் செய்யப்பட்டு ஆய்வாளர் சுதா என்பவர் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டார். வழக்குத்தொடர்பாக பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும், ஆய்வாளர் சுதா தங்களைத் தொடர்பு கொள்ள மறுத்து வந்ததாக நடிகை குற்றஞ்சாட்டினார்.
அதிரடியாக மாற்றம்
மேலும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என ஆய்வாளர் சுதா மீது நடிகை தரப்பிலிருந்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் இரு தினங்களுக்கு முன்பு 214 ஆய்வாளர்களை இடமாற்றம் செய்தபொழுது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதாவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த விஜயகுமாரி, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு நடிகையின் வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.