சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட அளவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிபுரிந்துவருகின்றனர். முதன்முறையாக இந்தக் கல்வி ஆண்டில் அனைத்துப் பணியிடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, பணிமூப்பு அடிப்படையில் பணியிடமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வு நேற்று (அக். 12) நடைபெற்றது.
இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள், அதே நிலையில் பணிபுரிந்துவரும் அலுவலர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குத் தேவையான இடங்களைத் தேர்வுசெய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராகப் பணியிடத்தைத் தேர்வுசெய்தார். பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமன் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராகப் பணியிடம் தேர்வுசெய்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா உளுந்தூர்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராகப் பணியிட மாறுதல் பெற்றுள்ளார்.
விரும்பிய இடங்களில் பணி
மாவட்ட கல்வி அலுவலர்கள் 110 பேர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குப் பணி இடமாறுதல் பெற்றுள்ளனர். இவர்கள் தங்களின் பொறுப்புகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிட்டு புதிய பணியிடத்தில் பணியாற்ற வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
புத்தொளி பெறும் பள்ளிக் கல்வி
மேலும் 13 மாவட்ட கல்வி அலுவலர்கள் ஏற்கனவே பணிபுரிந்த இடங்களில் தங்களுக்கான பணியினைத் தேர்வுசெய்துள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் முதல்முறையாக அனைத்துப் பணியிடங்களும் காலியாகக் காண்பிக்கப்பட்டு ஒளிவுமறைவின்றி கலந்தாய்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலாண்டு, அரையாண்டு தேர்வு கிடையாது - அமைச்சர் அன்பில் பொய்யாமொழி