நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்து வருகிறது. ஏராளமானவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதால் பல நகரங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், தென்னக ரயில்வே சார்பில் அவசர சிகிச்சை மையங்களாவும் மாற்றும் ரயில் பெட்டிகளைத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று முதல் அலை பரவலுக்கு முன்பாக கடந்தாண்டு ஏப்ரல் மாதம், தொற்று பாதித்தவர்களைத் தனிமைப்படுத்தும் மையங்களாவும், தேவைப்பட்டால் அவசர சிகிச்சை மையங்களாகவும் பயன்படுத்தும் வகையில் ரயில் பெட்டிகள் சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டது.
நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நேரத்தில் காலியாக இருந்த ரயில் பெட்டிகள் தற்காலிக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டது. 20 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ரயில் பெட்டிகளில் கீழ் இருக்கையில் நோயாளிகளை படுக்க வைக்கும் வகையில் பெட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டது.
இதற்காக நடு வரிசை படுக்கைக்கள் (மிடில் பெர்த்) மற்றும் மேல் படுக்கைகளுக்கு ஏற பொருத்தப்பட்டிருக்கும் கம்பிகள் அகற்றப்பட்டுருந்தது. ரயில் பெட்டியில் உள்ள ஒரு கழிவறையை மரப்பலகை கொண்டு அடைத்து குளியலறை ஆக மாற்றி அங்கு ஷவர் வசதி, வாலி, கப் போன்றவை வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் இடையே பிளாஸ்டிக்கினாலான திரை சீலைகள் அமைக்கப்பட்டது.
மருத்துவ உபகரணங்களை பயன்படுத்தும் வகையில் நோயாளிகள் வைக்கப்படும் அனைத்து இடங்களிலும் 230 வாட் திறன் கொண்ட சார்ஜிங் வசதிகள் வழங்கப்பட்டிருந்தது.
தென்னக ரயில்வே சார்பில் இதுபோன்று 573 பெட்டிகள் இவ்வாறு கரோனா சிகிச்சை பெட்டிகளாக மாற்றப்பட்டது. பின்னர் ஏராளமான வட மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊர் செல்வதற்காக காத்திருந்தபோது இந்தப் பெட்டிகள் மீண்டும் சாதாரண ரயில் பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அலுவலர் கூறுகையில், "முதல் அலையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படாததால் இதனைப் பயன்படுத்தவில்லை. தற்போது அதற்கான தேவை ஏற்பட்டால் ரயில் பெட்டிகளை வழங்க தயாராக இருக்கிறோம்.
தென்னக ரயில்வே வசம் சுமார் 300 மாற்றி வடிவமைக்கப்பட்ட பெட்டிகள் உள்ளன. அவை பயன்படுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள அரசுகள் எங்களிடம் பெட்டிகளை கோரினால் நாங்கள் அதனை உடனடியாக அந்த இடத்துக்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம்" என்றார்.