சென்னை: கண்ணகி நகர்-ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகன் வசந்தகுமார் (11), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றிரவு (மே 27) சிறுவன் வசந்தகுமார் அவரது வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாட சென்று பின் வீடு திரும்புகையில், பெத்துராஜ் என்பவருக்கு சொந்தமான கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தபடியே வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்றவுடன் சிறுவன் வசந்தகுமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனே திவ்யா தனது மகனிடம் என்ன ஆச்சு என கேட்ட போது ரோஸ்மில்க் வாங்கி குடித்ததிலிருந்து வாந்தியாகவும் மயக்கம் வருவதாகவும் தெரிவித்துள்ளார். உடனே திவ்யா இன்று (மே 28) தனது மகன் வசந்தகுமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உயிரிழந்த சிறுவனின் தாயார் திவ்யா, இது குறித்து கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், அங்கு சென்ற போலீசார் சிறுவன் வசந்த்குமார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவன் பெத்துராஜ் என்பவர் கடையில் ரோஸ்மில்க் வாங்கி குடித்தது தெரியவந்ததை அடுத்து போலீசார் பெத்துராஜிடம் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பெத்துராஜ் கடை அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் வீட்டிலேயே தயார் செய்து கொடுத்த ரோஸ்மில்கை தான் வாங்கி விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் ரோஸ்மில்க் தயாரித்து கொடுத்த ஆனந்தராஜிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, சில நாள்களுக்கு முன்பு ரூ.10 குளிர்பானம் வாங்கி குடித்த ஒரு சிறுமியும் ஒரு பெண்ணும் உயிரிழந்த நிலையில், தற்போது ரோஸ்மில்க் வாங்கி குடித்த சிறுவன் வசந்த்குமார் உயிரிழந்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நிலைகுலைந்த நித்தியானந்தா! இடது காலில் காயமாம்..!