கரோனா வைரஸ் பரவல் காரணமாக பன்னாட்டு விமான சேவைகள் இந்தியாவில் இன்னும் தொடங்கவில்லை. ஆனாலும், வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்கள் இந்தியா வருகின்றன. அதேபோல் இந்தியாவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியா்கள், மருத்துவர்கள் உட்பட அத்தியாவசியப் பணிகளுக்காக மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று வெளிநாடு செல்பவா்களுக்காக சில விமானங்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, லண்டன்-சென்னை இடையே சிறப்பு விமானங்களை பிரிட்டிஷ் ஏா்வேஸ் நிறுவனம் இயக்குகிறது. நேற்று காலை லண்டனிலிருந்து சென்னை வந்த பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம், இன்று காலை 8.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் லண்டன் செல்ல இன்று போதிய பயணிகள் முன்பதிவு செய்யாத காரணத்தால், இன்று செல்ல வேண்டிய சிறப்பு விமானம் ரத்து செய்யப்பட்டது.
அவ்விமானம் நாளை காலை புறப்பட்டு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானத்தில் செல்லவிருந்த பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக பிரிட்டிஷ் ஏா்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறையாக ரிஷசனில் பொருளாதாரம்- பாதிப்பு என்ன? மீட்சி எப்போது?