சென்னை: சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அவசியமான மின் தளவாடப் பொருட்களான மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள், மின்கோபுரங்கள் மற்றும் இதர தளவாடவாடப் பொருட்களின் கையிருப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பெருமழை மற்றும் புயல் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் விபத்தைத் தவிர்க்க மின் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் நிலைமை சீரடைந்தவுடன் உரிய கள ஆய்வு செய்து மின் விநியோகத்தை தொடரவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், துணை மின் நிலையங்களில் மழைநீர் புகுவதைத் தடுக்க மணல் மூட்டைகள் மற்றும் தண்ணீரை வெளியேற்றும் மின்மோட்டார்களை தயார் நிலையில் வைக்கும்படியும், பெருமழை மற்றும் புயல் போன்றவற்றால் மின் கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்களை விரைந்து சரிசெய்ய தேவையான பணியாட்கள், உபகரணங்கள், மற்றும் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தினார்.
நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள 93,881 மின்கம்பங்கள், 19,826 கி.மீ. மின்கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 1,500 கி.மீ. தாழ்வழுத்த புதைவடங்கள் மற்றும் 50 கி.மீ. உயரழுத்த புதைவடங்களும் கையிருப்பில் தயராக உள்ளது எனவும் கூறினார்.
"பருவமழை காலங்களில், எதிர்கொள்ளக்கூடிய வகையில் மின்சார வாரியம் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகள் வழங்கி இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்துள்ளன. குறிப்பாக 93,881 மின் கம்பங்கள், 19,826 கி.மீ மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15,600 கி.மீ தாழ்வழுத்த புதைவடங்கள், 50 கி.மீ அளவிற்கு உயர்யழுத்த புதைவடங்கள் இப்போது தயார் நிலையில் உள்ளன" என கூறினார்.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்தடை ஏற்படக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதலமைச்சர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. எந்த இடங்களிலும் மின் தடை இல்லாத அளவிற்கு மின் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
"4320 மெகவாட் வாரியத்தின் நிறுவு திறன், இதில் கடந்த ஆட்சியில் 1800 மெகவாட் அளவு தான் உற்பத்தி செய்தார்கள். மேலும் நம்முடைய சொந்த உற்பத்தி தற்போது 3,500 மெகாவாட் அளவிற்கு உயர்த்தி இருக்கிறோம். குறிப்பாக நம்முடைய ஒரு நாள் சராசரி தேவை 320 மில்லியன் யூனிட் செப்டம்பர் 24, 2021 முதல் அக்டோபர் 19 வரை நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து நாம் சந்தையில் கொள்முதல் செய்தது 397 மில்லியன் யூனிட்.
இந்த காலங்களில் 6,200 மில்லியன் யூனிட் விநியோகம் செய்திருக்கிறோம். இந்த 397 மில்லியன் யூனிட்டுகளில் 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது 65 மில்லியன் யூனிட்தான். அதிகளவில் மின்சாரம் தேவைப்படும்போது நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த கொள்முதல் தேவைப்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: எலும்பு மெலிதல் நோய் தினம்: ஏன், எதனால், என்ன செய்யலாம்?