தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தனியார்மயம் புகுத்தப்படுவதைக் கண்டித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்கள், ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று (நவ. 04) அனைத்து மாவட்ட மின்வாரிய ஊழியர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தின் முன்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் மத்திய அமைப்பின் தலைவர் ஜெய்சங்கர் கூறுகையில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 3 துணை மின் நிலையங்களைப் பராமரிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
அதேபோல் 300 கி.மீ. நீளமுள்ள உயர் மின்னழுத்த பாதையை மூன்றாண்டுகளுக்குப் பராமரிக்கவும் டெண்டர் விடப்பட்டுள்ளது. அவற்றில், ஓய்வுபெற்ற பணியாளர்களைப் பணியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போது மின்சாரத் துறையில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.
அவற்றில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல், வேலையைப் பறிக்கும் வகையில் மின்சார வாரியம் செயல்பட்டுள்ளது. எனவே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதற்கு நல்ல முடிவு வரவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின்சார வாரியம் தனியார்மயமாவதைக் கண்டித்து மாநில அளவில் போராட்டம்