சென்னை: தமிழ்நாட்டில் 5 துணை மின் நிலையங்களை தனியார் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவினை மின்சார வாரியம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து மின்சார வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியத்தின் தலைவர் பங்கஜ்குமார் பன்சாலுடன் ஆலோசனை நடத்தினார். தொழிற்சங்க நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தைக்குச் செல்லாத நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கமணி, வயர்மேன், கேங்மேன் பணியிடங்களை தனியார் மூலம் தேர்வு செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
துணை மின் நிலையங்களையும் தனியார் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து துணை மின் நிலையங்களை தனியார் பராமரிப்பதற்கு அளிக்கப்பட்ட உத்தரவுகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தற்போது ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், மதுரை மாவட்டம், சமயநல்லூர், திருப்பத்தூர், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள துணை மின் நிலையம் ஆகியவற்றை தனியார் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் பராமரிப்பதற்கும், இயக்குவதற்கும் ரூ.93.67 லட்சத்திற்கு ஒப்பந்தத்திற்கு விட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
புளியந்தோப்பில் அமைக்கப்பட்ட புதிய 400/230 கே.வி துணை மின் நிலையத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் மின் தடையின்றி பராமரிப்பதற்காக தனியாருக்கு ரூ.202 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மின்சார வாரியம் தனியார் மயமாகாது - அமைச்சர் தங்கமணி