சென்னை: பி.இ, பிடெக் பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இன்று (செப்.14) காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் 15ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மாணவர்கள் தங்களின் ஆன்லைன் மூலம் தாங்கள் விரும்பும் கல்லூரியை பதிவு செய்ய வேண்டும்.
முதல் முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படித்த மாணவர்களில் 15ஆயிரத்து 660 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுப்பிரிவில் 15ஆயிரத்து 161 மாணவர்களுக்கும், தொழிற்கல்விப்பிரிவில் 499 பேருக்கும் தரவரிசைப் பட்டியில் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 15ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
மாணவர்களின் மதிப்பெண்கள் பட்டியல்
பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் கலந்துக் கொள்வதற்காக ஒரு லட்சத்து 36ஆயிரத்து 973 மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 200க்கு 200 மதிப்பெண்களை 13 மாணவர்கள் பெற்றுள்ளனர். 199.5 மதிப்பெண்களை 8 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தொழிற்கல்வி பிரிவில் 2ஆயிரத்து 60 மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 193.955 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை மாணவர் கிஷோர் பெற்றுள்ளார். பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் படிப்பிற்கு ஜூலை 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிகலாம் என அறிவிக்கப்பட்டது.
ஒரு லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்தாண்டு விண்ணப்பித்த போதும், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 45 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியிருந்தனர். அவர்களில் 2ஆயிரத்து 722 மாணவர்கள் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள், தகுதியில்லாத மாணவர்கள் என ஒட்டுமொத்தமாக 3ஆயிரத்து 290 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


கலந்தாய்வில் பங்கேற்கும் மொத்த மாணவர்கள் - 1,39,033
மாணவர்கள் எண்ணிக்கை - 87,291
மாணவிகள் எண்ணிக்கை - 51,730
மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை - 12
தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 1,20,886
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 17,121
ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 613
பிற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் - 414
கலந்தாய்வில் பங்கேற்கும் கல்லூரிகள் - 440
கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ள இடங்கள் - 1,51,870. பொறியியல் படிப்பில் கலந்தாய்விற்கான கட்ஆப் மதிப்பெண்கள் உயருகிறது.
இதையும் படிங்க: நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை