சென்னை: கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் டென்னிஸ் போட்டியில் விளையாடுவது, சற்று அதிகரித்துள்ளதாகவும் இவை, இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும் பெண்கள் விளையாடுவதற்கு முதலில் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தமிழக டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில், ஓபன் டபிள்யு.டி.ஏ. 250 சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்.12ஆம் தேதி தொடங்கி செப்.18ஆம் தேதி வரை 7 நாட்கள் நடக்க உள்ளநிலையில் இன்று (செப்10) அதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இந்த பிரதான சுற்றில் விளையாடும் வீராங்கனைகளின் பட்டியலை தமிழக டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் தலைமையில் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அவர், "சென்னையில் முதல் முறையாக, இப்போட்டியானது நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் அரசின் பங்களிப்பு நன்றாக உள்ளது. இப்போட்டியைக் காண அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு பல இடங்களில் இது மாதிரியான போட்டிகளுக்காக மைதானம் அமைப்பது, அவற்றை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரம், பள்ளி மாணவர்களுக்கு எந்த விளையாட்டில் விருப்பம் உள்ளது என அரசு கவனம் செலுத்தி வருகிறது. குழந்தைகள் மாலை நேரங்களில் படிப்புகளுக்குப் பிறகு கட்டாயம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாட வேண்டும். இவ்வாறாக விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகள் பொதுத்தேர்வுகள் என பார்க்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டும்.
படிப்பு மற்றும் தேர்வில் கவனம் தேவை இருந்தாலும் விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நிச்சயம் அவர்கள் விளையாட வேண்டும். ஏனென்றால், தற்போது போட்டியில் விளையாடும் பல பெண்கள் இன்னும் பள்ளிக்கூடத்தைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. அவர்கள் ஆர்வம் தான் இங்கே அவர்களை கொண்டு வந்தது.
பெண்கள் டென்னிஸ் போட்டியில் விளையாடுவது, கடந்த 10 ஆண்டுகளில் சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், இன்னும் அதிகரிக்க வேண்டும். பெண்கள் விளையாடுவதற்கு முதலில் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு பின்பு, மக்கள்; அதற்கு பிறகுதான் அரசு உதவியாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக மேடையில் பேசிய விஜய் அமிர்தராஜ், 'சர்வதேச அளவிலான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்போட்டியை நன்றாக நடத்தி முடித்தோம் எனில், இது போன்ற பல போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். தமிழக வீரர்கள் போட்டியில் தோற்றாலும் கூட இது போன்ற போட்டியின் மூலமாக அவர்களுக்கு விளையாட்டின் யுக்திகளையும் அனுபவத்தையும் பெறுகிற நன்மைகள் நடைபெறும்.
மூன்று செட்களைக் கொண்ட டென்னிஸ் விளையாட்டில், எந்தப் போட்டி எப்போது நடைபெறும் என முன்பே கணிக்க இயலாது. அதேபோல், போட்டியில் நேரடியாக விளையாடுவதற்கென யாரையும் தேர்ந்தெடுக்கவும் முடியாது. அப்படி தேர்ந்தெடுத்தால், அதற்காக கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு அது ஏமாற்றைத்தை அளிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் முதல் முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடக்கம்