சென்னை: இந்தியாவில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்று விட்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சட்டப்பேரவையில் சபாநாயகரின் செயல்பாடு தனிச்சையான முடிவு அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வந்து பெரும்பான்மை கொண்ட கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராகவும், குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாகவும் வந்து இணைந்து, ஏகமனதாகவும் பெரும்பான்மையான உறுப்பினர்களுடன் சில தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது.
ஆளுநர் தீர்மானத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சில தீர்மானங்கள் கிடப்பில் உள்ளன.
அகில இந்தியா சபாநாயகர்கள் மாநாட்டில் பேசுகின்ற உரிமை இருந்ததால், இந்த கருத்து பேசப்பட்டது.
குடியரசுத் தலைவருக்கு சட்டத்தை எவ்வளவு காலத்திற்குள் அனுப்ப வேண்டும் என்பதும் இல்லை. எப்போது ஆளுநர் அனுப்புகிறாரோ, அப்போது தான் அனுப்ப முடியும்.
தீர்மானம் மீது ஆதரவாகவோ, எதிராகவோ முடிவு எடுக்கப்பட்டதா என்பதை சொல்லாமல் ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்.
எதற்குச் சட்டம் நிராகரிக்கப்பட்டது. சட்டம் ஏன் உடனடியாக தர முடியவில்லை என்ற எந்த விளக்கமும் இல்லை. இவை சபாநாயகருக்கோ, ஆளும்கட்சிக்கோ, எதிர்க்கட்சிக்கோ இல்லை. தமிழ்நாட்டில் யார் அதிகாரம் படைத்தது, யார் என்றால் மக்கள் தான்.
மக்கள் அளிக்கும் வாக்கில் தான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கோ, தீர்மானத்திற்கோ காலதாமதம் ஏற்படும்போது, மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகத் தான் அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வேளாண் திருத்தச் சட்டங்கள் வாபஸ்
மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் சார்பில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
முதலில் புள்ளி வைத்தால் தான், எப்போதாவது ஒரு முறை பலன் கிடைக்கும். ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்தச் சட்டம் மாநிலப் பட்டியலில் உள்ளது.
மாநில அரசுகளுடன் கலந்து பேசாமல், சட்டம் கொண்டு வந்தது ஏற்புடையது அல்ல என முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்திற்கு 3 மாதத்தில் பலன் கிடைத்துள்ளது. இதுபோல் தான், இந்தியாவில் நடந்த சபாநாயகர் மாநாட்டில் தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் என்ற முறையில் தான் எடுத்து வைத்த புள்ளி, ஒரு நாள் எல்லோராலும் ஏற்கக் கூடியதாக மாறும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Farm Laws : சத்தியாகிரகத்தின் முன் அகம்பாவம் அடிபணிந்தது - வேளாண் சட்ட நீக்கம் குறித்து ராகுல் காந்தி