சென்னை: சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்களான சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் புரோக்கர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு பாலியல் தொழில் நடத்த அனுமதி வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் உரிமம் பெறாமல் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடத்துவதாக சென்னை காவல்துறையினருக்கு எழுந்த புகாரின் பேரில் சென்னையில் 151 இடங்களில் காவல்துறையினர் நேற்று(நவ.21) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அதன்பின், கீழ்பாக்கம், தியாகராய நகர், அண்ணா நகர், வடபழனி, அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் விதிமீறி செயல்பட்ட 63 மசாஜ் மற்றும் ஸ்பா சென்டர்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடத்தியதாக ஒரு வழக்கை காவல்துறையினர் பதிவு செய்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், உரிமம் பெறாமல் செயல்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்ட 63 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களை சீல் வைத்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு பரிந்துரை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஐந்து மாவட்டங்களில் கனமழை...!