சீன அதிபர் வருகை
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வருகிற 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் திபெத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
திபெத்தியர்கள் கைது
இதற்கிடையில் தாம்பரத்தில் பெண் உள்பட எட்டு திபெத்தியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சீன அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்ததாகத் தெரிகிறது. தற்போது அவர்களுக்கு வருகிற 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல் துணை ஆணையர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவு- பின்னணி
அந்த உத்தரவில், சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குள்பட்ட பகுதியில் வசிக்கும் திபெத்தியர்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் கைதாகியுள்ள திபெத்தியர்கள், சுதந்திர திபெத் என்ற இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
திபெத் பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே
ஜி ஜின்பிங் சந்திப்புக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டில் திபெத் மாணவர்கள் கைது!