சென்னை: பொது சுகாதாரத் துறையில் ஆயிரத்து 646 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் அரசால் நியமனம்செய்யப்பட்டு பணியாற்றிவருகின்றனர். தங்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் - மாவட்ட ஆட்சியர் மூலம் பணி நியமனம் செய்வதைக் கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசே நேரடியாக மருத்துவப் பணியாளர் நியமனம் வாரியம் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டி.எம்.எஸ். வளாகத்தில் நேற்று (நவம்பர் 29) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். ஆனால் இன்று காலை 12 மணி வரையில் அவர்களை விடுதலை செய்யவில்லை. இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியுள்ளதாவது,
"சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் போராடிய சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள 900-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பணி நீக்க முடிவை ரத்துசெய்ய வேண்டும், தேசிய சுகாதாரத் திட்டம் மாவட்ட ஆட்சியர் மூலம் தற்காலிக அடிப்படையில் பணிநியமனம் செய்யும் முறையைக் கைவிட வேண்டும், எம்.ஆர்.பி. மூலம் நிரந்தர அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்திட வேண்டும்.
மேலும், அம்மா மினி கிளினிக்குகளுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர்களைப் பணிநீக்கம் செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும்; கோவிட் பணிக்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களையும், செவிலியரையும், இதரப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்வதைத் தமிழ்நாடு அரசு கைவிட்டு, பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.
உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலும், டெங்கு, வெள்ளம் போன்ற பாதிப்புகள் உள்ள நிலையில், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடவேண்டிய பணியும் உள்ள நிலையில் மருத்துவப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்வது சரியல்ல.
பொதுமக்கள் நலன் கருதி மருத்துவப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவுகளைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தை விற்ற விவகாரம்: தாயே பணத்தை ஒளித்துவைத்து நாடகமாடியது அம்பலம்