சென்னை : நீரழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மாத்திரை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியம், “கரோனா காலத்தில் ரத்த அழுத்தம், நீரழிவு போன்ற இணை நோய் உள்ளவர்கள் மாத்திரை வாங்குவதற்காக வெளியில் செல்ல சிரமப்படுகிறார்கள்.
எனவே மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். அதன் படி முதற்கட்டமாக நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோயுள்ள 20 லட்சம் பேர் கண்டறியப்படுவார்கள். அவர்களுக்கு வீடு தேடிச் சென்று மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இணை நோயாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
இதையும் படிங்க : ஸ்டெர்லைட் ஆலை மூடுவது எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்!