சென்னை ஐஐடியில் புற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் அஸ்வினி குமாா் கலந்துகொண்டார். தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும் உலகத்திலேயே ஆயுஷ்மான் பாரத் என்ற திட்டம் சிறப்பானதாக உள்ளது என்றும் கூறினார். 50 கோடி மக்களுக்கான ரூ.5 லட்சம் மருத்துவ உதவி திட்டம் உயிர் காக்க உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
பண வசதி இல்லாத ஏழை-எளிய மக்களுக்கான சிறந்த திட்டமாக ஆயுஷ்மான் பாரத் உள்ளது என்றும் இந்த திட்டத்தின் மூலம் இந்திய மக்கள் உயர்தர சிகிச்சை பெற முடியும் எனவும் தெரிவித்தார். இந்த திட்டத்தில் இதுவரை 38 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளதாகக் கூறிய அமைச்சர், நாடு முழுவதும் உள்ள ஒன்றரை லட்சம் சுகாதார மையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
இந்த சுகாதார மையங்களில் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் உடல்நலம் குறித்து அறிந்து தேவையான சிகிச்சைகள் வழங்க ஏழு லட்சம் சுகாதார உதவியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.